
ஹரி ஓம்
ஸ்ரீ சுவாமி சத்யானந்தருடைய நூறாவது ஜெயந்தி வருஷமான 2023 ஆண்டில் சென்னை வாழ் மக்களாகிய நாம் மாபெரும் பாக்கியம் அடைய இருக்கிறோம்.
சுவாமி நிரஞ்சனாநந்தருடைய அருட்பெரும் கருணையினாலும் சுவாமி சத்சங்கி அவர்களின் பேரருளாலும் குரு தேவர் ஸ்ரீ சுவாமி சத்யானந்தருடைய திவ்ய பாதுகைகள் நமது சத்யானந்த யோக மையத்தில் வெள்ளிக்கவசம் பூண்டு அருள் பாலிக்கிறது.
இவ்வாண்டில் குரு பூர்ணிமா மகோத்சவத்தின் பொழுது ஸ்ரீ சுவாமிஜி அவர்களின் பாதுகைகள் ரிக்கியா பீட்டில் ஸ்ரீ சுவாமிஜியின் சமாதியிலும் அவரது கணேஷ் குடிர் வளாகத்திலும் சதுர் வேத பாராயணம் மற்றும் குருபூர்ணிமா மகோத்சவத்தின் பொழுது வைக்கப்பட்டு ஸ்ரீ சுவாமிஜி அவர்களுடைய அனுக்கிரகத்துடன் சென்னை திரும்பியது. இது தாங்கள் அனைவரும் முன்பே அறிந்ததே.
லக்ஷ்மி நாராயண மகாயக்ஞத்தின் பொழுது ஸ்ரீ சுவாமிஜி அவர்களின் திவ்ய பாதுகைகள் கங்கா தர்ஷன் ஆசிரமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்காடாவிலும் ஸ்ரீ சுவாமிஜி உடைய தங்குமிடமாக விளங்கிய ஸ்ரீநிவாசிலும் மற்றும் ஸ்ரீ சுவாமிஜி பல தவங்கள் புரிந்து சித்தி பெற்ற பாதுகா தர்ஷன் ஆசிரமத்திலும் லக்ஷ்மி நாராயண வேதியிலும் வைக்கப்பட்டு ஸ்ரீ சுவாமிஜி மற்றும் சிவானந்தர் மற்றும் லக்ஷ்மி நாராயணர்கள் நல் அருளை பெற்று மீண்டும் திருவல்லிக்கேணியில் சத்யானந்தா யோக மையத்தில் தற்பொழுது இருக்கின்றது.
அமிர்த லஹரி ஆண்டில் ஸ்ரீ சுவாமிஜியின் பாதுகைகள் சென்னையில் வாழும் ஸ்ரீ சுவாமிஜியுடைய சீடர்கள் இல்லங்களுக்கு அனுக்கிரக யாத்திரை மேற்கொள்ள இருக்கிறது.
வரும் மாதங்களில் ஸ்ரீ சுவாமிஜியின் திவ்ய பாதுகைகள் இல்லம் தோறும் பாதுகா ஆராதனா ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஷ்ரத்தா
பிரதியாஹாரா மநஹ் பிரசாத ஷிபிராம் என்கிற ஆழமான மற்றும் தீவிரமான யோக பயிற்சி முகாம் ஒன்றை கடந்த பத்திற்கும் மேலான ஆண்டுகளாக சத்யானந்த யோக மையம் நடத்தி வருகிறது.
ஒவ்வொரு சாதகனுக்கும் இன்றியமையாததாக குறிப்பிடப்பட்டுள்ள ஆறு குண நலன்களில் ஒன்று ஷ்ரத்தா என்பதாகும்! சாஸ்திரம் வழங்குகிற வழிகாட்டுதலில் ஷ்ரத்தா என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
“ஷ்ரத்தா என்றால் குரு சாஸ்திர ஈஸ்வர விஷயங்களில் அசைக்க முடியாத முழுமையான நம்பிக்கையோடு கூடிய ஈடுபாடு என்று புரிந்து கொள்ளலாம்.”
அதாவது குருநாதர் ஒரு சொல் கூறினால், அவரது அந்த ஒரு சொல் எனக்கு நன்மை மாத்திரமே பயக்கக் கூடியது. குருநாதர் ஒரு போதும் எனக்கு எவ்விதத்திலும் கெடுதல் நினைக்க முடியாத தன்மையிலும் நிலையிலும் இருப்பவர். அவர் கூறுகிற வழிகாட்டுதல் எனக்கு கடை பிடிப்பதற்கு கடினமாக இருந்த போதிலும், என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும் கூட, வார்த்தையை சிரமேற் கொண்டு கடைப்பிடிப்பதற்கு சிரத்தை என்கிற குண நலன் உதவுகிறது.
சாஸ்திரம் என்பது நுட்பமான ஞானத்தை மற்றும் அதி நுட்பமான நடவடிக்கைகளை பின்பற்றும் படி நமக்கு வழிகாட்டுகிறது. நம்முடைய புலன்களின் மூலமாகவும், மனதாலும், அறிவைக் கொள்ளும் நாமே புரிந்து கொள்ள முடியாதவற்றை நமக்கு எடுத்து கூறி நெறிப்படுத்துகின்ற வேலையை செய்வதற்காகவே ஈஸ்வரன் சாஸ்திரங்களை வழங்கி உள்ளார். ஆகவே நம் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற விஷயங்களை நமக்கு அறிவுறுத்தும் பணியை சாஸ்திரங்கள் செய்கின்றன. ஈஸ்வரனாலும் ரிஷிகளாலும் நமக்கு சாஸ்திரங்கள் வழி வழியாக வழங்கப்படுகின்றன. சாஸ்திரங்களை கடைப்பிடிப்பது அவற்றின்படி நடப்பது சிறிது கடினமாக இருந்தால் கூட சாஸ்திரங்கள் என்றும் எனக்கு நன்மையை மட்டுமே செய்கின்றன என்கிற திடமான புரிதலும் இந்த புரிதலால் சாஸ்திரங்களின் வழிகாட்டுதலை முழுமையாக சிரமேற்கொண்டு செயல்படுத்துகின்ற தன்மையை சிரத்தை என்று அறிகிறோம்.
எல்லாம் வல்ல ஈஸ்வரன் நம் மீது கொண்டுள்ள அருட்பெரும் கருணையினால் நம் வாழ்வில் நாம் முன்னேறுவதற்கு தகுந்த சூழல்களை மற்றும் அனுபவங்களை நம் முன்னே உருவாக்குகிறார். சில நேரங்களில் இத்தகைய சூழல்களும் அனுபவங்களும் நமக்கு வசதியாகவும் பல நேரங்களில் மிகுந்த சோதனை அளிப்பதாகவும் அமைகின்றன. நமக்கு வசதியான அனுபவங்களையும் சூழல்களையும் ஆவலுடன் வரவேற்கிற நாம் சோதனைகள் வரும்போது மாத்திரம் இறைவனுக்கு கண் இல்லையா, கருணை இல்லையா போன்ற அறிவுக்கு புறம்பான உணர்ச்சி வயப்பட்ட கேள்விகளை கேட்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையா துணையாக ஒவ்வொரு அணு நொடிப் பொழுதும் எனக்கு நன்மைகளை வாரி வாரி செய்து கொண்டிருக்கிற ஒரே பொருள் ஈஸ்வரனே. அவர் ஏற்படுத்துகின்ற அனுபவங்களும் சூழல்களும் மிகச் சரியானதாக மட்டுமே இருக்கக் கூடும் என்கிற புரிதலே சிரத்தா என்கிற தன்மையாகும்.
இவ்வாறு ஈஸ்வரன், குரு மற்றும் சாஸ்திரத்தின் மீது ஒருவருக்குள்ள சிரத்தையை வளர்த்து பலப்படுத்தக்கூடிய தொடர்பை சத் சங்கம் என்று யோக பரம்பரைகளில் பிரசித்தமாக உள்ளன.
குரு பாதுகா ஆராதனா
குரு பக்தியை ஒரு யோகமாகவே ஸ்ரீ சுவாமி நிரஞ்சன் ஆனந்தர் எங்களுக்கு அளித்துள்ளார். குருநாதருடைய திவ்ய பாதுகைக்கு சிரத்தையுடன் பூஜையும் ஆராதனையும் செய்கின்ற ஓர் அற்புதமான வழிமுறை பின்பற்றப்படுகிறது.
2019ல் கோவிட் துவங்குவதற்கு சற்று முன்னால் எங்களுடைய மனப்பிரசாத சேவா மாணவர்கள் எல்லோருக்கும் இந்த குரு பக்தியோக எனும் ஆராதனை முறையை கற்றுக் கொடுத்து அவர்கள் அனைவரின் இல்லங்களிலும் குரு பக்தியோக நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா காலத்தில் குரு தேவருடைய திவ்ய பாதுகைகள் சென்னையில் உள்ள எங்கள் மாணவர்களின் இல்லங்கள் பலவற்றிற்கு “திவ்யப்பாதுகா அனுக்கிரக யாத்ரா” மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. அரசின் கொரோனா நடவடிக்கைகளுக்கு ஊடே எவ்விதமான தடங்கலும் இன்றி அரசின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டு திவ்ய பாதுகா அனுக்கிரக யாத்ரா ஆச்சரியமூட்டும் விதத்தில் நடந்தது.
கலவரமும், பயமும், மரணத்தின் ஓலமும் எங்கும் கேட்டுக் கொண்டிருந்த இக்கட்டான அந்த காலகட்டத்தில் ஸ்ரீ சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்களுடைய திவ்ய பாதுகை அவருடைய சீடர்களின் இல்லங்களில் நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வையும், முற்போக்கான சிந்தனையையும், சிரத்தையையும் நன்றாக பலப்படுத்தியது. கோலாகலமான இந்த வைபவத்தை எங்கள் குரு தேவர் சுவாமி நிரஞ்சன் ஆனந்தா சரஸ்வதி அவர்களுக்கு தெரிவித்த பொழுது, குருநாதர் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தார்.
வெள்ளி கவசம்
ஸ்ரீ சுவாமிஜி அவர்களுடைய திவ்யப் பாதுகைக்கு ஒரு அழகான வெள்ளிக்கவசம் அணிவித்து ஒரு ஒரு பாதுகையிலும் ஸ்ரீ யந்திரமும் ஒரு குரு யந்திரமும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்கிற ஒரு அவா கொரோனா காலத்திலே நிகழ்ந்த திவ்ய பாதுகா அனுக்கிரஹ யாத்திரையின் பொழுது மனதிலே மேலோங்கி நின்றது. இதை எப்படி செய்யலாம் ? யாரிடம் இந்த பொறுப்பை தருவது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவாளுக்கு வெள்ளியிலும் தங்கத்திலும் பல ஜோடி பாதுகைகள் செய்து கொடுத்த ஜோஷி என்கிற பொற்கொல்லர் ஒருவருடைய தொடர்பு குருநாதருடைய கிருபையினாலே ஏற்பட்டது.
ஸ்ரீ சுவாமி உடைய பரம பவித்திரமான மர பாதுகைகளை ஜோஷி அவர்களிடம் அளவெடுப்பதற்காக கொடுத்து அனுப்பி இருந்தோம் அதை அளவெடுத்துக் கொண்டு சுமார் ஒன்றரை கிலோ வெள்ளியும் இரண்டு எந்திரங்களுக்கு இரண்டு பவுன் ஸ்வர்ணமும் தேவைப்படும் என்று புரிந்து கொண்டோம்.
சம்பூர்ண சத்துருவேத பாராயணம்
வெள்ளிக்கும் தங்கத்திற்குமான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த காலத்திலே, 23 ஆம் ஆண்டு துவக்கத்தில் ரிக்யா ஆஸ்ரமத்திலிருந்து சாமி சத்திய சங்கானந்த சரஸ்வதி அவர்களுடைய அந்தேவாசி தொடர்பு கொண்டு ரிக்கியா ஆசிரமத்தில் ஜூலை மாதம் குரு பூர்ணிமாவிற்கு வேத பாராயணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நாம் செய்த பாக்கியம் நமக்கு இந்த அரிதான வாய்ப்பு மாபெரும் அனுக்கிரகம் வந்து அமைந்தது என புரிந்து கொண்டு ஆத்தூர் பாடசாலை என்று பிரசித்தமான சத்துருவேத வித்யா மஹா கணபதி வேத வித்யா ஸ்தானம் செங்கல்பட்டு அருகே திரு காமகோடி அவர்களிடம் தொடர்பு கொண்டு அந்தப் பாடசாலையின் தலைமை ஆசிரியராக விளங்குகின்ற பிரம்மஸ்ரீ குமரகுரு கணபாடிகள் அவர்கள் தலைமையில் சம்பூர்ண சத்துருவேத பாராயணம் ஜூலை மாதம் 2023ல் மிக விமர்சையாக நடந்தது.
பரமஹம்சா சுவாமி சத்திய சந்தானந்தா சரஸ்வதி அவர்களிடம் ஸ்ரீ சுவாமிஜி உடைய திவ்ய பாதுகைகளை ரிக்கியா ஆஷ்ரமத்திற்கு கொண்டு வந்து வேதபாராயண காலத்திலே ஸ்ரீ சுவாமிஜி னுடைய சமாதிஸ்தலத்தில் வைத்து ஸ்ரீ சுவாமிஜி அவர்களுடைய ஆசிகளை பெற்றுக் கொண்டு பின்னர் திவ்ய பாதுகைகளுக்கு வெள்ளிக்கவசம் செய்ய முடிவெடுத்தோம். சுவாமி சத்சங்கியிடம் வேண்டுகோள் வைத்த போது அவர்கள் அதற்கு உடனே இசைவு தெரிவித்தார்கள். நாராயண வைபோகத்திற்கு 22 வேத பண்டிதர்களை அழைத்துக் கொண்டு ரிக்கியா ஆசிரமம் சென்றோம் அப்பொழுது ஸ்ரீ சுவாமிஜி அவர்களின் திவ்ய பாதுகையை சுவாமி சத்சங்கி அவர்களிடம் ஒப்படைத்தோம். சம்பூரண சத்குரு வேத பாராயணம் குரு பூர்ணிமா அன்று நிறைவடைந்தது. அன்றைக்கு சுவாமி சத்சங்கி அவர்களுக்கு கலச தீர்த்த அபிஷேகம் செய்கின்ற பாக்யத்தை நான் பெற்றேன். ரிக்கியா ஆசிரமத்திலே, சமாதி ஸ்தலத்தில் வைக்கப்பட்டு ஒரு வாரம் பூஜை பாராயணம் அபிஷேகம் அனைத்தும் செய்யப்பட்டு திவ்ய பாதுகா ரிக்கியா ஆசிரமத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு சத்யானந்த யோக மையத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
திவ்ய பாதுகைகளின் முங்கேர் யாத்திரை
ஜோஷி அவர்களிடம் இருபாதுகைகளுக்கும் வெள்ளிக்கபட்சமும் ஒரு ஸ்ரீ எந்திரமும் ஒரு குரு எந்திரமும் தங்கத்திலே பொறிக்கப்பட்டு இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு லட்சுமி நாராயண மகா யக்ஞா முங்கேர் ஆசிரமத்தில் குரு தேவர் சுவாமி நிரஞ்சன் ஆனந்தா சரஸ்வதி அவர்கள் அனுமதியோடு அவர்களிடம் ஒப்படைத்தோம்.
2023 செப்டம்பர் மாதம் நடந்த லட்சுமி நாராயண மகாத்யத்தின் பொழுது ஆசிரமத்தில் உள்ள குருப்பீட்டிலும் அக்காடாவிலும் ஸ்ரீநிவாசலும் வைக்கப்பட்டு பின்னர் சன்னியாஸ் வீட்டிலே லட்சுமி நாராயண யக்ஞ வேதியிலே மொத்தம் 10 நாட்கள் முங்கேரில் ஆராதனைகள் முடிந்தபின் மீண்டும் திவ்ய பாதுகா அனுக்கிரஹ யாத்ரா கல்கட்டா பெங்களூரு ஹைதராபாத் பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் இன்னும் பலருடைய இல்லங்களில் திவ்ய ஆராதனா மிக விமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் இதயத்தில் நீங்காத ஆனந்த அதிர்வுகளை நம்பிக்கையை பேரருளின் மீது திடமான ஈடுபாட்டை ஷரத்தயை ஏற்படுத்தியது .
2024 முதல் ஸ்ரீ சுவாமிஜி அவர்களின் திவ்ய வெள்ளிப் பாதுகைகள் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அன்று குரு பக்தியோக ஆராதனையின் பொழுதும் மற்றும் குருபூர்ணிமா சத்தியம் பூர்ணிமா சிவானந்த ஜன்மோத்சவம் போன்ற முக்கிய நாள்களிலும் பக்தர்கள் அனைவர் முன்னிலையில் ஆராதனைகளும் அபிஷேகங்களும் விசேஷமான பூஜைகளும் செய்து கொண்டு வருகிறோம்.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள சத்யானந்தா யோக மையத்தில் ஸ்ரீ சுவாமி சத்யானந்தா சரஸ்வதி அவர்களின் திவ்ய ரஜத பாதுகைகள் வீற்றிருந்து இங்கு வரும் அனைவருக்கும் குரு அருளையும் ஆனந்தத்தையும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது. நீங்களும் அவசியம் சத்யானந்தா யோக மையத்திற்கு வருகை தந்து குரு தேவருடைய அன்பையும் அருளையும் பெற வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
சன்னியாசி சிவ ரிஷி
www.syctchennai.com
